இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் வரையறுக்கப்பட்ட கொடகே சகோதரர்கள் தனியார் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த எழுத்தாளர் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
குமாரதுங்க கலையகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலக்கியத்துறையில் சிறப்பாக சேவையாற்றிய மூத்த எழுத்தாளர்கள் 15 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன. இவர்களில் அல்-அஸ்மத், ரி.ஞானசேகரன் ஆகியோரும் அடங்குவார்கள்.
இவ்விழாவில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன உரையாற்றுகையில்,
இலங்கையில் நன்மதிப்பு வென்ற பழைய இலத்திரனியல் ஊடகம் என்ற ரீதியில் தேசிய வானொலிக்கு சமூக பொறுப்பு உள்ளது. நாட்டின் கலாசாரத்தையும், இலக்கிய பாரம்பரியங்களையும் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அந்தப் பொறுப்பை தேசிய வானொலி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறதென்று தெரிவித்தார்.
மக்கள் மத்தியில் இலக்கிய ஆர்வம் குன்றி வரும் வேளையில் அதனை வளர்ப்பதற்கு பாடுபடுவது அவசியமாகும். இதற்காக கொடகே நிறுவனம் தேசிய வானொலியுடன் கை கோர்துள்ளமையை பெரிதும் வரவேற்பதாக இலங்கை வானொலியின் தலைவர் கூறினார். தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காக ஆற்றிவரும் சேவைகள் பற்றியும் அவர் மேலும் விபரித்தார்.
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, ஊடக மற்றும் நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி, செயற்பாட்டு பணிப்பாளர் தனுஷ்க்க ராமநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.