மருத்துவ துறையின் அனைத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி இலவச மருத்துவம் எனும் சொல்லுக்குரிய சரியான அர்த்தத்தை வழங்கியது தற்போதைய அரசாங்கமே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அபிவிருத்தி செய்யப்பட்ட கல்கமுவ தள மருத்துவமனையை மக்களிடம் கையளிக்கும் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
துயுஐஊயு நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் 900 மில்லியன் ரூபாவிற்கும் அதிக செலவில் சகல வசதிகளையும் கொண்ட தள மருத்துவமனையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி சுகாதார அமைச்சராக இருந்தபோது 2013 ஆம் ஆண்டில் இச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
வெளி நோயாளர் சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, இயன் மருத்துவப் பிரிவு, தாய் சேய் பராமரிப்பு நிலையம், சிறுவர் சத்திர சிகிச்சை வாட்டுத் தொகுதி, மகப்பேறு மற்றும் பெண்ணியல் சிகிச்சைப் பிரிவு, மகப்பேற்று அறை, குறைப்பிரசவ சிகிச்சைப் பிரிவு, குருதி வங்கி மற்றும் சகல வசதிகளும் கொண்ட இரசாயன ஆய்வுகூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த மருத்துவமனை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 201 மில்லியன் ரூபா செலவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், மருத்துவமனையின் அத்தியாவசிய தேவையான புதிய நீர்வழங்கல் கட்டமைப்பிற்காக 20 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி , 2015 ஜனவரி 08 ம் திகதி இந்நாட்டு மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இலங்கையை உலகில் தலை சிறந்தவொரு நாடாக கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.
கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள் காரணமாக நாட்டின் உற்பத்தி செயல்முறையில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை இயன்றளவு குறைத்து மக்களுக்கு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களினால் நெல் உற்பத்தி மற்றும் மரக்கறி உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதை அரசியல்ரீதியான பிரச்சினையாக சுட்டிக்காட்டுவதற்கு அரசுக்கெதிராக செயற்படுபவர்கள் முற்படுகின்றமை இப்போது மட்டும் இடம்பெறும் விடயமல்ல என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலவச மருத்துவத்தை பலப்படுத்தி அதன் உயரிய நன்மைகளை மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி , டெங்கு பிரச்சினை போன்ற நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் தங்களது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தி செய்யப்பட்ட மருத்துவமனையை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனை பார்வையிட்டதுடன், சிறுவர் வாட்டுத்தொகுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
அபிவிருத்தி செய்யப்பட்ட கல்கமுவ தள மருத்துவமனை போதைப்பொருள் ஒழிப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவமனையாகும் என்றும் ஜனாதிபதியினால் இதன்போது பிரகடனம் செய்யப்பட்டது.
இலத்திரனியல் சுகாதார தரவுத்தொகுதியும் ஜனாதிபதியினால் இதன்போது திறந்து வைக்கப்பட்டதுடன், அபிவிருத்தி செய்யப்பட்ட மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட முதலாவது நோயாளியையும் ஜனாதிபதி பதிவு செய்தார்.
இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு விசேட நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதியமைச்சர்களான தாராநாத் பஸ்நாயக்க, இந்திக்க பண்டாரநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மாகாண அமைச்சர் லக்ஷ்மன் வெடறுவ, ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் மொஹான் பெரேரா, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், ஜப்பான் பிரதி உயர்ஸ்தானிகரும், ஜயிக்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.