வெளிநாட்டில் பிள்ளைகள்! யாழ்ப்பாணத்தில் வயோதிப பெற்றோருக்கு நடந்த கொடுமை

j

j1

யாழ். வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் தனித்திருந்த வயோதிப தம்பதியினரின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி பெறுமதியான நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உடுப்பிட்டி 15ம் கட்டைப் பகுதியிலிலுள்ள வீடொன்றிற்குள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை-02.30 மணியளவில் வீட்டின் சமையலறையின் புகைப் போக்கியைப் பிரித்து உள்நுழைந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர்கள், உறங்கிக் கொண்டிருந்த வயோதிபத் தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர்.

அங்கிருந்த தொலைபேசி இணைப்பைக் கொள்ளையர்கள் உடனடியாக துண்டித்துள்ளனர்.

அதன் பின்னர் இரு திருடர்கள் வயோதிபத் தம்பதியினரின் கழுத்தில் கத்தியை வைத்து அவர்களை மிரட்ட ஏனைய இரு திருடர்களும் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.

வீட்டுக்குள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 பவுண் தங்க நகை மற்றும் நான்காயிரம் ரூபா பணம், பெறுமதியான கைத்தொலைபேசி, வங்கி ஏ.ரி. எம்அட்டை என்பன இதன் போது திருடர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன.

திருட்டுக் கும்பலில் ஒருவன் வீட்டு உரிமையாளரான வயோதிபரை நோக்கி ‘நீ வழமையாக கழுத்தில் போட்டிருக்கும் பெரிய சங்கிலி எங்கே?’ எனக் கேட்டுள்ளான்.

மேலும் குறித்த கொள்ளையர்கள் கொள்ளையிட்ட பின்னர் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக அந்த வீட்டிலேயே ஆசுவாசமாகத் தரித்து நின்று தேநீர் தயாரித்துக் குடித்ததுடன், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் குளிர்ந்த நிலையில் காணப்பட்ட மென்பானங்களையும் பருகியுள்ளனர்.

பின்னர் தாம் கொண்டு வந்த பீடி, சிகரெட் என்பவற்றை பிடித்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்த வயோதிப பெண்மணி அவற்றின் புகையைக் கண்டு முகம் சுளித்த போது உன்ர புருஷன் சுருட்டுப் பத்துபவர்.

நீ அதனை மாத்திரம் மணக்கலாம்…. நாங்கள் பீடி, சுருட்டுப் பத்துறது உனக்குப் பிடிக்கவில்லையோ? எனக் கேட்டுள்ளனர்.

அதன் பின்னர் ஆறுதலாக வீட்டில் தரித்து நின்ற திருடர்கள் திருடிய களைப்பு நீங்கிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் குறித்த வயோதிபத் தம்பதியினரைக் கடுமையாக அச்சுறுத்தியமையால் இருவரும் அச்சமடைந்திருந்ததாகவும், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று நீண்டநேரத்திற்குப் பின்னரே சம்பவம் தொடர்பாக அயலவர்கள் அறிந்திருந்ததாகவும் தெரியவருகிறது.

கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர் தலையில் தொப்பி அணிந்திருந்த போதும் திருடவந்தவர்கள் எவரும் முகமூடி அணிந்திருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை காலை வயோதிபத் தம்பதியினரால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேற்படி வயோதிபத் தம்பதியினரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த வயோதிபத் தம்பதியினர் வீட்டில் தனித்து வசித்து வருவதாகவும், இருவரையும் நீண்டகாலம் நோட்டமிட்ட பின்னரே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.