இலங்கை விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் !!!

s

அண்டை நாடுகளைக் கையாளும் விடயத்தில், குறிப்பாக இலங்கை விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டதாகவும், இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

எமது அண்டை நாடுகளை கையாளும் முறையில் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

உங்களின் அண்டை நாடுகளை, உங்களுக்கு மட்டுமே அண்டை நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது.

அவர்கள் ஏனையவர்களுக்கும் கூட அண்டை நாடுகள் தான். இது ஒரு பூகோள உலகம்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை கோரிக்கை விடுத்த போது, அதற்கு பதிலளிக்காமல் விட்டது இந்தியாவின் மிகப் பெரிய தவறாகும்.

இதன் விளைவாகத் தான் சீனர்கள் அங்கு வந்து அபிவிருத்தியைச் செய்ய வேண்டிய நிலையேற்பட்டது.

இந்தியாவில் 83 வீதமான வர்த்தகம் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், இந்தியா பதில் கொடுக்கத் தவறியது ஆச்சரியமானது.

சபஹார் துறைமுகத்தின் அபிவிருத்தி விடயத்தில் இந்தியா பக்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதமும் கூட புத்திசாலித்தனமானது அல்ல.

பத்தாண்டுகளுக்கு முந்திய பாதையில் தான் இந்தியா இன்னமும் சென்று கொண்டிருக்கிறது, ஆனால் உலகம் நிறையவே மாறி விட்டது.

இந்தியா வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.