மகிந்த காலத்தில் பின்பற்றப்பட்டவையே இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது!

a

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை வெளிநாட்டு அதிகாரிகள் பலர் சந்தித்திருந்தனர் என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து அதற்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்துத்த அவர்,

மனித உரிமை, தீவிரவாத எதிர்ப்பு குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் கடந்த வாரம் இலங்கை வந்திருந்த போது, முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கையாளப்பட்ட நடைமுறைகளுக்கு மாறான அணுகுமுறை கையாளப்படவில்லை.

அப்போதிருந்த நடைமுறைகளின் அடிப்படையில் தான் அவருக்கான அனுமதிகள் அளிக்கப்பட்டன.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை வெளிநாட்டு அதிகாரிகள் பலர் சந்தித்திருந்தனர். ஆனால் அப்போது, தம்மைத் தேசியவாதிகள் என்று கூறிக் கொண்டோர் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

ஐ.நா அறிக்கையாளர் பென் எமர்சன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக சில தவறான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். ஆனால் இந்த விடயம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்துள்ளோம். கொழும்பு வந்துள்ள ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலரிடமும் முறையிட்டுள்ளோம்.

எமர்சன் ஒரு அறிக்கையாளர் மட்டுமே. அவர் ஐ.நா முறைமையின் ஒரு அங்கம் அல்ல. எனவே அவரது சில கருத்துக்கள் தொடர்பாக அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. எமர்சனின் எல்லாக் கருத்துக்களும் பாதகமானவை அல்ல. அவர் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.