கொழும்புவில் தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கைக் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி 187 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை எடுத்திருந்தது, விராட் கோலி 34 ரன்களுடனும், ரஹானே 30 ரன்களுடனும் களத்தில் நிற்க, கேஎல். ராகுல் அதிரடி முறையில் ஆடி 58 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக அபினவ் முகுந்த் ரன் எடுக்காமலும் புஜாரா 12 ரன்களிலும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் திலினா பெர்னாண்டோவிடம் பவுல்டு ஆகி வெளியேறினர்.
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் அணி 139/1 என்ற நிலையிலிருந்து சரசரவென விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களுக்குச் சுருண்டது. ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 6.5 ஓவர்களில் 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மொகமது ஷமி 5 ஓவர்கள் வீசி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற குணதிலக ஜடேஜாவின் அருமையான பீல்டிங்குக்கு ரன் அவுட் ஆனார்.
இலங்கை அணியில் தனுஷ்கா குணதிலக 97 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார், இதில் 11 பவுண்டரிகள் அடங்கும், முதல் டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் ஆட முடியாத நிலையில் குணதிலக இந்த இன்னிங்ஸ் மூலம் தன்னை தேர்வு செய்ய இலங்கை தேர்வாளர்களை சிந்திக்கச் செய்துள்ளார்.
மற்றொரு வீரர் திரிமானே 125 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஜடேஜாவிடம் அவுட் ஆனார். 2-வது விக்கெட்டாக திரிமானே அவுட் ஆன பிறகு சரிவு ஏற்பட்டு 56வது ஓவரில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் அணி 187 ரன்களுக்குச் சுருண்டது. இன்றைய ஆட்டத்தில் உமேஷ் யாதவ் பந்து வீச்சு சோபிக்கவில்லை, அவர் 8 ஓவர்களில் 43 ரன்களை விட்டுக் கொடுத்தார். அஸ்வின் 10 ஓவர்களில் 2 மெய்டன்களுடன் 34 ரன்கள் கொடுத்து விக்கெட் இல்லாமல் முடிந்தார்.