இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் நாள் நடந்த இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட, ராம்ராத் கோவிந்த் சுமார் 66 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் என்று நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தமது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தமது அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தியாவின் 14ஆவது குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது கீச்சகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.