நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஐ.நா வழங்கிய இரண்டு வருடகால அவகாசத்தில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என எதிர்க் கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்காக உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் உள்ளிட்ட அதிகாரிகளை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே இரா.சம்பந்தன் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீண்ட காலமாக இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளுக்கிடையில் இருந்த போட்டி காரணமாக தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
தற்போது சர்வதேச சமூகம் தமிழ் மக்களது பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமென்பதில் தமது பங்களிப்பினை வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார்கள்.
காணாமல் போனவர்களின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் காணிப்பிரச்சினைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடியிருக்கின்றோம்” என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைகலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.