படத்தின் தலைப்பு போடும் முன்பே படம் என்ன மாதிரியான ஜானர் என 2-டி அனிமேஷன் மூலம் கோடிட்டுக் காட்டிவிடுகின்றனர் புஷ்கர் – காயத்ரி. அந்த 2டி குறும்படத்தில், வேதாளம் விக்கிரமாதித்யன் தோளைச் சுற்றிக் கொண்டு, ஒரு கதையைச் சொல்லவா எனக் கேட்கிறது.
வேதா எனும் ரெளடி புதிர் போட, காவல்துறை அதிகாரி விக்ரம் அதை எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு ஆச்சரியமூட்டுகிறது. முதல் ஃப்ரேமிலேயே கதை தொடங்கி விடுகிறது. சின்னச் சின்ன வசனங்களிலும் ஆழமாய்ப் புதிராயும் கதை பொதிந்துள்ளது. படம் முடியும் பொழுதுதான், படத்தின் அனைத்துக் காட்சியும் ஒன்றோடு ஒன்று எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது எனத் தெரியும்.
மாதவன் தனது நேர்த்தியான நடிப்பால் கட்டுக்கோப்பாய் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அசத்தலாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. மாதவனின் நேர்த்தியை ரசிப்பதிலிருந்து, அசால்ட்டாய் ரசிகர்களைத் தன் பக்கம் திருப்பிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி வசனம் பேசும் ஏற்றயிறக்க தொனியும், கதாபாத்திரத்திற்குப் பொருந்தும் உடல்மொழியும் படத்தின் மிகப் பெரிய பலம். கதை சொல்லும் பொழுது விஜய் சேதுபதியும், அக்கதையின் புதிரை அவிழ்க்கும் பொழுது மாதவனும் மாறி மாறி ரசிக்க வைக்கின்றனர்.
வக்கீல் பிரியாவாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாதின் அறிமுகம் க்யூட்டாய் உள்ளது. இவ்வளவு சீரியசான படத்தைக் கொஞ்சமாவது டைலூட் செய்ய உதவுவது அவர்தான். மாதவனிடம் கோபப்படும் காட்சிகளில் எல்லாம் ஷ்ரத்தா கவருகிறார். சந்திராவாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்குக் கொஞ்சம் காட்சிகள்தான் எனினும், ‘அதுவே போதும்’ எனத் தன் முத்திரையைப் பதித்துவிடுகிறார்.
விஜய் சேதுபதியின் தம்பியாக ‘கிருமி’ கதிர் நடித்துள்ளார். விஜய் சேதுபதியையும் மீறி திரையில் கதிர் தானேற்ற பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளது பெரிய விஷயம். பலமுறை பார்த்துப் புளித்துப் போன ரோல் என்பதால், ஆண்டவன் கட்டளை படத்தில் பயமுறுத்தியது போல், சேட்டன் பாத்திரத்தில் சோபிக்கவில்லை ஹரீஷ் (Hareesh Peradi). எனினும், படத்தில் வரும் அத்தனைக் கதாபாத்திரங்களையும் சரியாகப் பொருந்தும்படி தேர்ந்தெடுத்ததோடு மட்டுமின்றி, அனைவருக்கும் ஒரு தனித்த அடையாளத்தைக் கொடுத்திருப்பது திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.
ஒளிப்பதிவாளர் P.S.வினோதும், இசையமைப்பாளர் C.S.சாமும் மிக அற்புதமான அனுபவத்திற்கு உத்திரவாதமளித்துள்ளனர்.
விக்கிரமாதித்யன் கதையில், வேதாளம் சொல்லும் கடைசி கதைக்குப் பின் கேட்கப்படும் புதிர்க் கேள்விக்குப் பதில் கிடையாது. புஷ்கர் – காயத்ரி படத்தையும் அப்படியே முடித்துள்ளது மிகவும் சிறப்பு. ஆனால், படத்திலோ அந்தக் கடைசி புதிரை விக்ரம் போடுகிறார்.