பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பிசிசிஐ அறிவிப்பு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பிசிசிஐ அறிவிப்பு
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மும்பை,

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் டெர்பியில் நேற்று முன்தினம் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. மழையால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட்டுக்கு 281 ரன்கள் குவித்தது. துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 171 ரன்கள் (115 பந்து, 20 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி அமர்க்களப்படுத்தினார். உலக கோப்பையில் இந்திய வீராங்கனையின் அதிகபட்ச ரன் இதுவாகும்.

தொடர்ந்து விளையாடிய 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. எலிசி விலானி (75 ரன்), அலெக்ஸ் பிளாக்வெல் (90 ரன்) ஆகியோரின் போராட்டத்துக்கு பலன் இல்லை. லண்டன் லார்ட்சில் நாளை அரங்கேறும் மகுடத்திற்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகளுக்கு பிசிசிஐ பரிசுதொகை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ கூறியிருப்பதாவது:

மகளிர் உலககோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகளுக்கு தலா ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.  மகளிர் கிரிக்கெட் அணியில் உள்ள ஊழியர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.