யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார்.
இத்தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதல்தாரி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல்வார் வழியாக தப்பிச் சென்றிருந்தார்.
இதனையடுத்து யாழ். நகரப்பகுதி பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் தீவகப் பகுதிக்கு தப்பிச் சென்ற மர்ம நபரை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என தெரியவருகிறது.
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபரை யாழ் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.