யாழ். கடற்றொழில் சம்மேளனம் ரணிலுக்கு ஆதரவு!

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதவு வழங்கவுள்ளதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண்பலி!

பேருந்து சில்லுக்குள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (18.9.2024) அதிகாலை நாவலமுல்ல – மீகொடை வீதியில் சிரிமெதுரவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மீகொடதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

புலமைப்பரிசில் வினாத்தாள் நீக்கம் பரீட்சை திணைக்களத்தில் பெற்றோர் ஆர்பாட்டம்!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரீட்சை திணைக்களத்துக்கு முன்பாக பெற்றோர் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது, எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்சிலர், பரீட்சை திணைக்களத்துக்கு சென்று கடிதம் ஒன்றை வழங்கி உள்ளனர்.

கனேடிய அரசிக்கு எதிராக நம்பிக்கையில்ல பிரேரணை!

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படும் என எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் கனடிய நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பொலியேவ் தெரிவித்துள்ளார்.

லிபரல் கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த என்.டி.பி கட்சி ஆதரவு வழங்குவதை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல் !

காங்கேசன்துறையில் (Kankesanturai) சீமெந்து தொழிற்சாலையை நிறுவுவது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (18) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (B.S.M. Charles) தலைமையில், அவரது செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தாது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களை கொண்டு சீமெந்து தயாரித்து பொதி செய்து உள்நாட்டு தேவைக்காக விற்பனை செய்யும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலைக்கான முதலீட்டை மேற்கொள்ளவுள்ள ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சீமெந்து தொழிற்சாலை
இந்திய (India) முதலீட்டில் மேற்கொள்ளவுள்ள சீமெந்து தொழிற்சாலையில் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும், இதனூடாக உள்ளூர் மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர்கள தெரிவித்துள்ளனர்.

நிதி மூலம், தொழிற்சாலையை நிறுவுவதற்கான காணி கோரிக்கை, மூலப்பொருட்களின் இறக்குமதி, விற்பனை செயற்பாடுகள், செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கான கால எல்லை மற்றும் சுற்றாடல் அறிக்கை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அடங்கிய முழுமையான முன்மொழிவு திட்டத்தை விரைவாக சமர்பிக்குமாறு தெரிவித்த ஆளுநர் , உரிய நடைமுறைகளை பின்பற்றி அதனை சாதகமான முறையில் பரிசீலிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் யாழ் பிராந்திய சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ.ஆர். ஜெயமனோன் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சாதி ஒடுக்குமுறை தொடர்பில் நாமல் குற்றச்சாடு!

வடக்கில் சாதி ஒடுக்குமுறைமை காரணமாக இந்துக்களை உள்ளே அனுமதிக்காத சில கோயில்கள் இருக்கின்றன. அது அரசாங்க முறைமையினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல, மாறாக அது வடக்கின் கலாசார ரீதியிலான பிரச்சினையாகும் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மத சுதந்திரம் கொண்ட நாடு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உல­க­ளா­விய ரீதியில் உயர் வரு­மானம் பெறும் சில நாடு­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் உயர் மத சுதந்­தி­ரத்தைக் கொண்­டி­ருக்கும் நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருக்­கி­றது.

பௌத்­தர்­களும் இந்­துக்­களும் பல நூற்­றாண்டு கால­மாக அமை­தி­யாக ஒரு­மித்து வாழ்ந்து வரு­கின்­றனர். பௌத்த விகா­ரை­களை பாருங்கள் அவற்­றுக்குள் இந்து வழி­பாட்டு பகு­திகள் உள்­ளன.

தெற்கில் உள்ள இந்து கோயில்­களில் அவர்­க­ளது பண்­டி­கை­களை கொண்­டா­டு­வ­தற்­கான சுதந்­திரம் உள்­ளன.

மோதல்கள் தொடர்பில் ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் எப்­போதும் இருக்கும் சட்­டங்கள் மற்றும் தண்­ட­னை­களின் ஊடாக மாத்­திரம் எம்மால் ஒரு முழு நிறை­வான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.

மத தலை­வர்­க­ளுக்கு அவர்­களை பின்­பற்­றுவோர் மத்­தியில் நம்­பிக்­கைகள் சார்ந்த பரஸ்­பர புரிந்­து­ணர்வு மற்றும் சகிப்புத் தன்­மையை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டிய பொறுப்­புண்டு. வடக்கை பாருங்கள். அங்கே சாதி ஒடுக்­கு­மு­றைமை கார­ண­மாக இந்­துக்­களை உள்ளே அனு­ம­திக்­காத சில கோயில்கள் இருக்­கின்­றன.

அது அர­சாங்க முறை­மை­யினால் ஏற்­பட்ட பிரச்சி­னை­யல்ல மாறாக அது வடக்கின் கலா­சார ரீதி­யி­லான பிரச்­சி­னை­யாகும். அதனை இந்து மத தலை­வர்­களே தீர்க்க வேண்டும். அதில் அர­சாங்கம் தலை­யிட்டால் அவர்கள் தமது மத சுதந்­திரம் பறிக்­கப்­ப­டு­வ­தாக கூறுவார்கள்.

நாம் அர­சாங்கம் என்ற ரீதியில் அர­சி­ய­ல­மைப்பில் கூறப்­பட்­டுள்­ள­வாறு அனைத்து பிர­ஜை­க­ளுக்­கு­மான மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தி பாது­காப்போம். இது குறித்த தனித்த பிரிவு எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ளது என குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதி தொடர்பில் ரணில் எச்சரிக்கை!

டொலரின் பெறுமதி 500 ரூபாவாக அதிகரித்தால் அது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை உள்ளடக்கியதாகவே 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கு இணங்க நாம் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தால் அடுத்த வருடத்தின் வருமானம் மற்றும் செலவுக்கிடையில் 1000 பில்லியன் ரூபா நிலுவை ஏற்படும்.

அதனை நிவர்த்தி செய்வதற்கு எம்மால் சர்வதேச நிதி சந்தையில் கடன் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய தேசிய உற்பத்தியில் 5 வீதத்திற்கும் அதிகமான கடன் ஒத்துழைப்புகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

எனினும் திசைக்காட்டியில் யோசனைகளை நடைமுறைப்படுத்தினால் நிலைமை சிக்கலாகும். தேசிய மக்கள் சக்தியினரின் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் அவர்களுடன் விவாதமொன்றை மேற்கொள்ள நான் தயாராகவே உள்ளேன்.

அவர்கள் அது தொடர்பில் மக்கள் முன்னிலையில் தெரிவித்தாலும், அதற்கான நேரத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதைக் குறிப்பிட வேண்டும்.

அவர்களின் திட்டங்கள் வறுமை நிலை மக்களே அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளன. எனினும் நமது நாடு நடுத்தர நாடாகும்.

திசைகாட்டியின் வரவு செலவுத்திட்ட யோசனையின்படி அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுக்கிடையில் பெரும் இடைவெளி உருவாகும். அது நாலாயிரம் பில்லியன் ரூபாவாகும்.

எமது தேசிய உற்பத்தி வருமானத்தை நோக்கும் போது அது 11.2 வீதத்துக்கு அதிகமாகும். அவ்வாறு ஏற்படும் நிலுவையை நிவர்த்தி செய்வதற்கு சர்வதேச நிதி சந்தைகளில் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாது போகும்.

அப்போது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தம் இரத்தாகும். அவ்வாறானால் சர்வதேச நிதி சந்தையில் வட்டி வீதம் 25 வீதமாக அதிகரிக்கும். டொலரின் பெறுமதி 500 ரூபாவாக அதிகரிக்கும் இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்

ராஜபக்ச அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க தாயார் நாமல்!

ராஜபக்ச அரசாங்கம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்கத் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொட்டிகாவத்தை பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நாமல்,

“நாங்கள் எங்களின் தனிப்பட்ட தேவைக்காக சாலைகள் அமைக்கவில்லை, தனிப்பட்ட தேவைக்காக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவில்லை, தனிப்பட்ட தேவைக்காக முதலீட்டாளர்களை கொண்டு வரவில்லை.

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற திட்டமும், தொலைநோக்கு பார்வையும் மாத்திரமே இருந்தது. நாம் செய்த ஒவ்வொரு முதலீட்டிற்கும் நாமே பொறுப்பு.

இந்த பூமிக்கு ஒவ்வொரு மதிப்பையும் கொடுத்துள்ளோம். மகிந்த ராஜபக்சவின் காலத்தில் நாம் வாங்கிய கடனுக்கு நாம் தான் பொறுப்பு.

திருடிவிட்டோம் என்று யாராவது சொன்னால், உலகில் எந்த நீதிமன்றத்துக்கும் சென்று நிரபராதி என்பதை நிரூபிக்கத் தயார் என்று சவால் விடுகிறோம்.

போராட்டத்துக்குப் பிறகு இந்தத் தேர்தலை எதிர்கொள்ள பயப்படுகிறோமா என்று சமீபத்தில் எங்களிடம் கேட்கப்பட்டது.
எங்கள் கைகளில் இரத்தம் இல்லை. தவறில்லை. நம்மைப் பற்றி வேறுவிதமான புரிதல் இருக்கலாம். தவறான கருத்து இருக்கலாம், ஆனால் மக்கள் முன் வந்து வாக்கு கேட்கும் பலம் எங்களுக்கு உள்ளது.

நாம் அப்பாவிகள் என்பதாலும், நாம் உருவான அரசியல் சூழலாலும் அந்த சுயபலம் நமக்காக கட்டமைக்கப்பட்டது” என்றார்.

கொழும்பில் சந்தேக நபரான பெண்ணை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!

கொழும்பில் சந்தேக நபரான பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

பாரிய காணி ஆவண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

150 மில்லியன் ரூபா பெறுமதியான காணிக்கு போலியான ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கையகப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலி ஆவணம்
அவருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, குறித்த பெண் வேறு ஒருவரைப் போன்று அடையாளப்படுத்தி போலியான பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் தெரிவித்தால் தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார், மக்களை கேட்டுள்ளனர்.

சந்தேக நபரான பெண்ணின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பாகிஸ்தான் வர்த்தகத்தில் விரிசல் நிலை!

பாகிஸ்தானும் இலங்கையும் வர்த்தகத்துறையில், இருதரப்பு பிணக்குகளை தீர்க்கும் அமைப்பை இன்னும் செயல்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னரும் கூட இந்த பிணக்குகள் மற்றும் வர்த்தக மோதல்கள் தீர்க்கப்படாமல் உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இலங்கைக்கான பாகிஸ்தானின் ஏற்றுமதிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய சஞ்சிகை ஒன்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வர்த்தக அமைச்சு
இலங்கை அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்பதன் காரணமாகவே இந்த நிலை தொடர்வதாக, பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சு, வர்த்தகத்திற்கான செனட் நிலைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

எனவே இந்த பிரச்சினை இப்போது அரசியல் மட்டத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று, அந்நாட்டு வர்த்தக அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

இந்தநிலையில் “நாங்கள் இலங்கையுடன் நட்புறவு கொண்டுள்ளோம், வர்த்தக மோதல்களை சுமுகமாக தீர்க்க விரும்புகிறோம்” என்று பாகிஸ்தானின் வர்த்தக அமைச்சர் ஜாம் கமல் தெரிவித்துள்ளார்;

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம், 2013ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்டது.

வீட்டின் கட்டிலுக்கு அடியில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வீடொன்றின் கட்டிலுக்கு அடியில் 10 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்யந்தர அதபத்துகந்த பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 10 வாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அதபத்துகந்த, டீயெந்தர பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம்(17) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​வீடொன்றின் படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வாள் இரண்டரை அடி நீளம் கொண்டதுடன், சந்தேகநபரிடம் இருந்து பத்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் பொலிசார்!

வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் புதன்கிழமை (18) ஆகும் .

இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான பாதைகள் சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட பொலிஸார் குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் விபரித முடிவால் உயிரிழந்த இளைஞர்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் வீட்டில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கோபிசன் வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

நேற்றைய தினம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்தர தீர்த்தத்திருவிழாவுக்கு நண்பர்களுடன் சென்று விட்டு இரவு 10:00 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய நிலையில் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .

சடலம் உடற்கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை தேர்தல் களத்தில் அதிகளவிலான பொலிசார்!

இலங்கையில் வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு மற்றும் ஏனைய கடமைகளுக்காக 63,000 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்கு எண்ணும் நிலையங்கள் மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதோடு பொருளாதார நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவம் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். பொலிஸாருக்கு உதவியாக 10,000 சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், நடமாடும் பயணங்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்தன்று வாக்களிப்பு நிலையங்களில் எவரேனும் கலவரமாக நடந்து கொண்டால், அதிகூடிய பலத்தை பிரயோகிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய பெரும் சோகம் – தாயும் மகனும் உயிரழப்பு!

தென்னிலங்கையில் மகனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத தாயும் உயிரிழந்த சோகமான சம்பவம் பலரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

பிங்கிரிய, பிரசன்னகமகம்மன பகுதியை சேர்ந்த 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான சஞ்சீவ பிரசன்ன மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த 70 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சந்திரா பியசிலியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெல்லி முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் பரிந்துரை!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வராக அமைச்சர் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அனைத்து எம்எல்ஏக்களும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கெஜ்ரிவால் கடந்த 13ஆம் திகதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.15) பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் இராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்” என்றார்.

சங்குக்கு வாக்களியுங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் கோரிக்கை!

தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிக்கையினையும் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்வதற்கு சிறந்த வாய்ப்பாக பொதுவேட்பாளர் காணப்படுவதனால் சங்கு சின்னத்திற்கும் பொதுவேட்பாளருக்கும் மட்டும் வாக்களிக்குமாறு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் இறந்தும் இருவரை வாழ வைத்த யுவதி !

கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது யுவதியின் சிறுநீரகம் இருவரை வாழவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூளைச்சாவு அடைந்த யுவதியின் சிறுநீரகம், இரண்டு நோயாளர்களுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டதாகவும், நோயாளிகள் நலமுடன் இருப்பதாகவும் கேகாலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சந்தன விஜேசிங்க நேற்று (15) தெரிவித்தாதுள்ளார்.

மூளைச்சாவு அடைந்த சுபன்யா
கேகாலை, கலிகமுவ பலபாகே பிரதேசத்தை சேர்ந்த சுபன்யா வீரகோன் என்ற 21 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி காலை தலைவலி ஏற்பட்டதையடுத்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிற்சை பலனின்றி கடந்த 13ம் திகதி அவர் மூளைச்சாவு அடைந்தமை உறுதி செய்யப்பட்டது. அதுதொடர்பில் யுவதியின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடம் தெரிவித்ததையடுத்து, அவரது கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்களை தானமாக வழங்க பெற்றோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இரண்டு நோயாளர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
இதற்கமைய, (14) திகதி இரண்டு நோயாளர்களுக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து உயிரிழந்த யுவதியின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினோம். நேற்று (15) அந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டு நலமாக இருப்பதாக அறிந்தோம்.

தன் மகள் இறந்துவிட்டாலும், அவளது உறுப்புகளுடன் வேறு யாரோ வாழ்கிறார்கள் என்று கேட்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, சுபன்யா வீரகோனின் இறுதிக் கிரியைகள் நேற்று (16) கலிகமுவவில் உள்ள பத்தபாவின் பொது மயானத்தில் நடைபெற்றுள்ளது.

டிரம்ப் கொலை முயற்சி!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் அந்தபகுதியில் காத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

சந்தேகநபர் முன்னாள் ஜனாதிபதி மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளவில்லை, எனினும் ஆயுதமேந்திய நபர்களினால் இரண்டு தடவைகள் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை நெருங்கிச் செல்ல முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்பின் கோல்ப் மைதானத்திற்கான விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்;ட ஒன்றில்லை என அமெரிக்க இரகசிய சேவைபிரிவின் இயக்குநர் ரொனால்ட் ரோவே தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அங்கு வருவாரா என்பது சந்தேகநபருக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரகசிய சேவைபிரிவின் முகவர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதிக்கு மிக அருகில் உள்ள பற்றைக்குள் இருந்து துப்பாக்கியொன்று தென்படுவதை பார்த்த பின்னர் இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தை கேட்டோம்,நான்கைந்து சத்தங்கள் என டிரம்ப் சமூக ஊடக நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

இரகசிய சேவை பிரிவினருக்கு அது துப்பாக்கி சன்னங்கள் என்பது தெரியும் அவர்கள் உடனடியாக என்னை பிடித்து இழுத்தனர்,அவர்கள் அற்புதமான விதத்தில் செயற்பட்டனர் என டிரம்ப் பாராட்டியுள்ளார்.

இதேவேளை தனது பாதுகாப்பிற்கு மேலும் பலர் தேவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் வாகனத்தில் தப்பியோடினார்,என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.தயார் நிலையில் துப்பாக்கி,டிஜிட்டல் கமரா,போன்றவற்றை விசாரணையாளர்கள் மீட்டுள்ளனர்.

40 நிமிடங்களின் பின்னர் ரையன் ரூத் என்ற 58 வயது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் தனது வேறு காரிலிருந்து திருடிய இலக்கதகட்டினை தனது காருக்கு பயன்படுத்தியுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசி மூலம் சம்பவம் இடம்பெறுவதற்கு 12 மணித்தியாலங்களிற்கு முன்னரே அவர் கோல்ப் திடலில் காணப்பட்டதை உறுதி செய்ய முடிந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் பொறித்த தீப்பெட்டி விநியோகம்!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் மற்றும் தேர்தல் சின்னம் பொறித்த தீப்பெட்டிகளை குழு ஒன்று நுவரெலியாவில் விநியோகித்ததாக பெப்ரல் அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.