டிரம்ப் கொலை முயற்சி!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என குற்றம்சாட்டப்பட்டவர் டிரம்பிற்காக 12 மணித்தியாலங்கள் அந்தபகுதியில் காத்திருந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிரம்பினை கொலை செய்ய முயற்சித்தார் என சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக பொலிஸார் துப்பாக்கிகள் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

சந்தேகநபர் முன்னாள் ஜனாதிபதி மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொள்ளவில்லை, எனினும் ஆயுதமேந்திய நபர்களினால் இரண்டு தடவைகள் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை நெருங்கிச் செல்ல முடிந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்பின் கோல்ப் மைதானத்திற்கான விஜயம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்;ட ஒன்றில்லை என அமெரிக்க இரகசிய சேவைபிரிவின் இயக்குநர் ரொனால்ட் ரோவே தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அங்கு வருவாரா என்பது சந்தேகநபருக்கு தெரிந்திருந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரகசிய சேவைபிரிவின் முகவர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதிக்கு மிக அருகில் உள்ள பற்றைக்குள் இருந்து துப்பாக்கியொன்று தென்படுவதை பார்த்த பின்னர் இரகசிய சேவை பிரிவினர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர்.

திடீரென துப்பாக்கி வேட்டுக்களின் சத்தத்தை கேட்டோம்,நான்கைந்து சத்தங்கள் என டிரம்ப் சமூக ஊடக நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

இரகசிய சேவை பிரிவினருக்கு அது துப்பாக்கி சன்னங்கள் என்பது தெரியும் அவர்கள் உடனடியாக என்னை பிடித்து இழுத்தனர்,அவர்கள் அற்புதமான விதத்தில் செயற்பட்டனர் என டிரம்ப் பாராட்டியுள்ளார்.

இதேவேளை தனது பாதுகாப்பிற்கு மேலும் பலர் தேவை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் வாகனத்தில் தப்பியோடினார்,என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்துள்ளன.தயார் நிலையில் துப்பாக்கி,டிஜிட்டல் கமரா,போன்றவற்றை விசாரணையாளர்கள் மீட்டுள்ளனர்.

40 நிமிடங்களின் பின்னர் ரையன் ரூத் என்ற 58 வயது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

அவர் தனது வேறு காரிலிருந்து திருடிய இலக்கதகட்டினை தனது காருக்கு பயன்படுத்தியுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசி மூலம் சம்பவம் இடம்பெறுவதற்கு 12 மணித்தியாலங்களிற்கு முன்னரே அவர் கோல்ப் திடலில் காணப்பட்டதை உறுதி செய்ய முடிந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரின் புகைப்படம் பொறித்த தீப்பெட்டி விநியோகம்!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் புகைப்படம் மற்றும் தேர்தல் சின்னம் பொறித்த தீப்பெட்டிகளை குழு ஒன்று நுவரெலியாவில் விநியோகித்ததாக பெப்ரல் அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

தேசத்தின் இருப்புக்காக தமிழர்கள் திரட்சியாக பாெது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (16.09) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் சிறப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பாேதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறப்பு குழு கூட்டத்திலும் மத்திய குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்தப் பாேவதாக தெரிவித்தார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளேன்.

சிங்கள தேசிய வேட்பாளர் ஒருவருடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழர்களது அரசியல் உரிமை தாெடர்பில் அவர்களது தன்னாட்சியை தருவதாக இல்லை. இதனால் நான் அதனை ஏற்றுக் காெள்ளவில்லை.

தமிழர்கள் திரட்சியாக தங்களின் தேசத்தின் இருப்பையும், தங்களது அடிப்படை அரசியல் உரிமைகளையும் நிலை நிறுத்துவதற்கும் பாெது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சந்தை நிலவரவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், வார இறுதியில் பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கரட் 200 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, ஒரு கிலோ கிராம் வெண்டைக்காயின் விலை 180 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் கோவாவின் விலை 2000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ கிராம் பாகற்காய் 200 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விலங்குகளிடமிருந்து பரவும் Brucellosis நோய் !

அம்பலாந்தோட்டை ரிதியகம பண்ணையில் உள்ள விலங்குகளிடமிருந்து பரவும் Brucellosis நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாடு, ஆடு, பன்றி போன்ற விலங்குகளால் மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது, மேலும் விலங்குகளுடன் நெருக்கமாக வேலை செய்பவர்களுக்கு இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம் என்றும் கூறப்படுள்ளது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட பத்து பேர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி, நிணநீர்க் குழாய்களில் வீக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படும் எனவும், இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நோயைத் தடுக்க, உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, முறையான சுகாதார முறைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் விலங்குகளின் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.

நோய் வருவதற்கு முன் கால்நடைகளுக்கு சரியான முறையில் தடுப்பூசி போடுவது முக்கியம் என சுகாதார திணைக்களம் கூறியுள்ளது.

மேலும் , அனைத்து வயதினரும் இந்த நோயால் பாதிக்கப்படலாம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் நோய் பரவாமல் தடுக்கலாம் என்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து இப்படத்தை ஆதிக் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் திரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. அதே போல் மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில், நட்டி நட்ராஜ் ஆகியோரும் நடித்து வருகிறார்களாம். இளம் நடிகை ஸ்ரீலீலாவும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் விமர்சனம்
இந்த நிலையில், படம் குறித்து விமர்சனம் ஒன்று வெளியாகியுள்ளது. என்னடா இது, படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை, அதற்குள் எப்படி விமர்சனம் என்று தான் பார்க்கிறீர்கள்.

பிரபல மருத்துவர் ஒருவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் படம் குறித்து தனது விமர்சனத்தையும் தெரிவித்துள்ளார்.

“Fanboy சம்பவம் எப்படி இருக்கும்னு காலத்துக்கும் பேசுற மாதிரி குட் பேட் அக்லி படம் இருக்கும். குட் பேட் அக்லி முதல் பாதி தெறிக்கவிட்டதற்கு நன்றி!! All d best for second half bro என பதிவு செய்துள்ளார்.

விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்த தேர்தல் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவினால் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்பை நடத்துவதற்கும், தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போது சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கும் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, இராஜகிரிய பொதுத் தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் சர்ச்சைத் தீர்வுப் பிரிவிற்கு சம்பவங்கள் தொடர்பில் அறிவிக்குமாறும் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.

மீண்டும் இணைந்த செல்வராகவன் – ஜி.வி பிரகாஷ் கூட்டணி.

இயக்குனர் செல்வராகவன்
காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.

அதன் பிறகு, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.

செல்வராகவன் – ஜி.வி பிரகாஷ் கூட்டணி
இவர் திரைப்படங்களில் பெரும்பாலும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பார். இருப்பினும், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன போன்ற படங்களில் ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருப்பர்.

இந்த படங்களில் ஜி. வி இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

சர்வதேச அழகிப் போட்டியில் இலங்கை பெண்ணிற்கு முதலிடம்

இந்தோனேசியாவில்(indonesia) நடைபெற்ற மிஸ் இன்டர்நஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கையின்(sri lanka) திலினி குமாரி நேற்று இரவு(16) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி 09/09 முதல் 09/16 வரை நடைபெற்றது.

கட்டுநாயக்கவை வந்தடைந்த அழகி
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற திலினி, 09/16 இரவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பல்வேறு துறைகளில் திறமை
ஹனுவர, பிரிமத்தலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல்வேறு துறைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார்.

காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு தருவதாக கூறும் ரணில்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காண்பதற்கு நீதியரசர் நவாஸ் ஆணைக்குழுவின் ஊடாக செயற்படுவார் என யாழ்ப்பாணம் (jaffna) நாவாந்துறையில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு இன்று 15 வருடங்கள் கடந்தோடி விட்டது. இதில் இறுதிப்போரில் தமது பிள்ளைகளை, கணவன்மாரை, உறவுகளை சீருடை தரப்பிடம் தமது கண்முன்னே கையளித்தவர்கள் அவர்களுக்கு இன்றுவரை நடந்தது தெரியாமல் அங்கலாய்க்கின்றனர்.

அவர்கள் கேட்பதெல்லாம் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைதான்.இதைக்கேட்டுத்தான் அவர்கள் வருடக் கணக்காக வீதியில் கிடக்கிறார்கள்.

இந்த 15 வருட காலத்தில் ஐந்து வருடம் நல்லாட்சி அரசு என்ற போர்வையில் ரணில் பிரதமர். தற்போது ஜனாதிபதி.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Lessons Learnt and Reconciliation Commission, LLRC) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவால் 2010ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட ஓர் உண்மையறியும் விசாரணை ஆணையமாகும். இந்த ஆணைக்குழுவால் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

அதேபோன்று ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்ட காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கூட எதனையும் செய்ய முடியவில்லை.

இப்போது மீண்டும் முதலிடத்தில் இருந்து தொடங்குவதாக அறிவித்துள்ளார் ரணில்.அதுவும் யாழ்ப்பாணத்தில்.

தமக்கு வாக்கு வேண்டுமென்பதற்காக தமிழர்களை தொடர்ந்தும் இழிச்சவாயர்களாக அவர்களின் துயரத்தில் இருந்து அதிகாரத்தை கை்கப்பற்ற துடிக்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் இவ்வாறான வாக்குறுதிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.இதற்கு ஆமாம் சாமி போடும் எம்மினத்தவர்களும் அவர்களுடன் இருக்கும் வரை…

தொடர்ந்தும் கண்ணீரில் தொலையும் தமிழரின் வாழ்வு…

சமூக ஊடகங்களில் பரவும் காணொளிகள் தொடர்பில் பொலிசார் எச்சரிக்கை!

தற்போதைய நிகழ்வுகளாக கடந்த கால சம்பவங்களை தவறாக சித்தரிக்கும் பழைய காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் இலாபத்திற்காக தவறாக வழிநடத்தும் வன்முறைச் சம்பவங்களை தூண்டக்கூடிய குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டம் தொடர்பான காணொளிகளை பகிர்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் தனிநபர்களால் வாகனங்களை சோதனை செய்வது மற்றும் ஊரடங்கு உத்தரவு காலத்தில் கைப்பற்றப்பட்ட காட்சிகள் போன்ற சில வீடியோக்கள் மீண்டும் பகிரப்பட்டு சமூக தளங்களில் பரவுகின்றன.

இந்த வீடியோக்கள் காலாவதியானதாக இருந்தாலும், பொதுமக்களை தவறாக வழிநடத்தி அமைதி மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்வதுடன் இது குழப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம்.

அவ்வாறான காணொளிகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நூலகத்தை எரித்த போது ரசித்தவர் இன்று ஜனாதிபதி வேட்பாளராக ….!

1981 ஆம் ஆண்டு யாழ். நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய போது பார்த்து ரசித்தவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிற்கின்றார் என தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட பிரதான அமைப்பாளருமான இ. சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கை நாங்கள் பிரிக்கவில்லை நீதிமன்றம் தான் பிரித்தது என எங்களுடைய தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anurakumara Dissanayake) தெரிவித்தார்.

1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பீடத்திற்கு வந்த அடுத்த நிமிடமே பண்டாரவளை, ஹப்புத்தளை, பலாங்கொடை போன்ற பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது இன வன்முறையை கட்ட விழ்த்து விட்டார்கள். 1983 ஆம் ஆண்டு இந்த நாட்டின் மிகப்பெரிய கரும்புள்ளியாக மாறிய ஜூலை கலவரத்தை யார் செய்தது.

1977 இல் இருந்து இன்று வரை 39 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்தில் இருப்பதுடன் 6 தடவைகளுக்கு மேல் பிரதமர் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதுவரை காலமும் வழங்காத தீர்வை இனிமேலா பெற்றுத் தரப்போகின்றார்.

2015, 2019 இல் தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்காக சட்டடவரைபு கொண்டு வரப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளில் இருந்தும் ஆலோசனை பெறப்பட்டது. அதில் தமிழ் மக்கள் தொடர்பாக எந்த தீர்வுகளையும் முன்வைக்காத கட்சி ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு தலைமை தாங்கியவர் ரணில் விக்ரமசிங்கவே“ என தெரிவித்துள்ளார்.

இன்றைய ராசிபலன்கள் 17.09.2024

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சிகள் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியைத் தவிர்க்கவும்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் காரிய அனுகூலம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். முயற்சிகள் சாதகமாக முடியும். செலவு கள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அம்பிகை வழிபாடு நன்று.கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீட்டில் சிறப்பு பூஜை செய்யும் வாய்ப்பு ஏற்படும்.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தேவை யான அளவுக்குப் பணம் இருப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது. வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். விநாயகரை வழிபடுவது நன்று.மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும்.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது நன்று.புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிக ளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சில ருக்கு மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யவும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

துலா ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடும்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு வருத்தம் தரும். குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் சஞ்சலம் ஏற்படும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்ப தற்கு வாய்ப்பு உண்டு.கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தைவழி உறவினர் களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். ஆனால், உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமான் வழிபாடு நலம் தரும்.மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப் பார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். இளைய சகோதரர் களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பொறுமை அவசியம். ஆஞ்சநேயர் வழிபாடு மகிழ்ச்சி தரும்.உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் பிள்ளைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கும்பராசி அன்பர்களே!

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் கடன் கேட்டு நச்சரிப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மீனராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். மற்றவர்களு டன் வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகரிக்கும் பணிச்சுமையால் அசதி ஏற்படும்.உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவது தாமதமாகும்.

கருணாவின் கட்சிக்குள் பிளவு!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என அக்கட்சியின் முன்னாள் உப தலைவர் ஜெயா சரவணா குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகியமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துளடளார்

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில் இருந்தும் அக் கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024 அன்று விடுவித்து கொண்டுள்ளேன்.

அக்கட்சியில் நீண்ட தூரம் என்னால் பயணிக்க முடியாது என்பதனை புரிந்து கொண்டேன்.

போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கைக்கு மற்றையவர்களிடம் கையேந்தும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதாரம், மேம்பாடு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பவற்றை கருத்தில் கொண்டு ஆரம்பித்த பயணம் இன்று பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது.

நிதிமோசடி
ஊழல் நிறைந்த அக்கட்சியில் இருந்து என்னால் எனது பயணத்தை தொடர முடியாது இருப்பதாலேயே இம் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் விநாயக மூர்த்தி முரளிதரனும்(கருணா அம்மான்), அவரினை சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் .

ஒரு கட்சியினை எப்படி வழிநடத்த வேண்டும் என தெரியாமல் மிலேச்சத்தனமான போக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும்போது ஜனநாயக பாதையில் மக்களின் தேவையை, மக்களின் அன்றாட வாழ்கைக்கு எப்படி உதவுவது என்பதனை புரிந்து கொள்ள தெரியாத நிலையில் ஒருவட்டத்திற்குள் என்னால் செயற்படமுடியாது.

எனக்கு பலபக்கங்களிலும் இருந்து நிறைய அழுத்தங்கள் , அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இருப்பினும் எனது மக்கள் சேவை அன்பின் இல்லம் அறக்கட்டளை சேவை மூலமும்,தொடரும்.

இதுரை நான் எவரிடமும் ஒரு சதம் கூட கேட்கவும் இல்லை, பெறவும் இல்லை .முழுநிதியும் என்னுடைய சொந்த உழைப்பில் எனது கையால் செலவிடப்பட்டது” என்றார்.

காதலனை தொல்லை செய்த பெண்ணிற்கு சிறைத்தண்டனை!

பிரித்தானியாவில், முன்னாள் காதலனுக்கு ஒரே நாளில் 1000 தடவை அழைப்பெடுத்து தொல்லை செய்து வந்த பெண்ணுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோபி கால்வில் [Sophie என்ற 30 வயதுடைய பெண்ணை டேவிட் பாக்லீரோ [David என்ற நபர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாகக் பெண் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
காதலனை இழக்க விரும்பாத அவர், டேவிட்டிற்கு 1,000 முறை தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். எனினும் டேவிட் அவருடைய அழைப்பைத் தவிர்த்த நிலையில் டேவிட்டை கண்காணித்து வந்த அவர், டேவிட்டின் வீட்டிற்குள்ளும் அத்துமீறி நுழைந்துள்ளார்.

சோபியின் செயற்பாடுகளால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் டேவிட் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கனடாவில் நிலநடுக்கம்!

கனடாவின்(canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குயின் சார்லோட் தீவுகள் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. பசுபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்து ஓட்டம்
நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வாக்கு மோசடி அபராரத் தொகை அதிகரிப்பு!

வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைப் பெண்களுக்கு புனர்வாழ்வு- வவுனியாவில் முன்னெடுப்பு!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிலையம் ஊடாக மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்தலின் போது ஊரடங்கு நடைமுறைப்படுத்தும் திட்டமில்லை!

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் தீர்மானம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்- இருவர் உயிரிழப்பு!

இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கேரளாவில் மலப்புரத்தில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் உறுதியானது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.